Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரான் மீதான போர் தொடர்ந்தால் உலகளவில் கடுமையான பொருளாதார சரிவு ஏற்படும் - ஐ.நா

03/04/2026 05:09 PM

நியூயார்க், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் மீதான போர் மத்திய கிழக்கில் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

இப்போர் தொடர்ந்தால், உலகளவில் கடுமையான பொருளாதார சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா பொது செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் எச்சரித்திருக்கிறார். 

''மோதலின் தாக்கம் ஏற்கனவே எல்லா இடங்களிலும் உணரப்படுகிறது. கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மறுக்கப்படுவதன் தாக்கத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஹோர்முஸ் நீரிணை நெரிக்கப்படும்போது, ​​உலகின் ஏழை மற்றும் மிகவும் நலிவடைந்த மக்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என்று அவர் கூறினார்.

இந்த போர் இரண்டாவது மாதமாகத் தொடரும் நிலையில், அதனால் பொதுமக்களின் துன்பம், அழிவு மற்றும் வட்டார, உலகளாவிய நிலைத்தன்மை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் குட்டரெஸ் கோரிக்கை விடுத்தார்.

ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்படும் நீடித்த இடையூறும் உணவு மற்றும் எரிசக்தி செலவுகளை அதிகரித்து, உலகின் ஏழ்மையான நாடுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)