பாவ், ஏப்ரல் 01 (பெர்னாமா) -- நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி கண்காணிப்பு அமைப்பின் மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கொண்டாடப்பட்ட பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து பல பெட்ரோல் நிலையங்களில் தேவை அதிகரித்துள்ள போதிலும் இதுவரை எரிபொருள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என்-இன் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
"பயனீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. சரவாக்கில் 283 நிலையங்களும், நாடு முழுவதும் 4400-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களும் உள்ளன. எங்கள் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளையும் கண்காணிப்பையும் மேற்கொள்வார்கள். இதற்குப் பிறகு, நாங்கள் சென்று பார்வையிடும் இடங்களில் அடுத்த கட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார் அவர்.
புதன்கிழமை சரவாக், பாவ்வில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை பார்வையிட்ட பின்னர் டத்தோ அஸ்மான் அடாம் செய்தியாளர்களிடம் பேசினார்.
சந்தையில் எரிபொருள், குறிப்பாக டீசல் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், எந்தவித இடையூறுகளும் முறைகேடுகளும் ஏற்படாமல் இருப்பதற்கும், எரிபொருள் விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக சபா, சரவாக் மற்றும் லபுவானில் அமலாக்க நடவடிக்கைள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
சரவாக்கில் உள்ள 283 பெட்ரோல் நிலையங்கள், சபாவில் உள்ள 266 பெட்ரோல் நிலையங்கள் மற்றும் லபுவானில் உள்ள ஏழு பெட்ரோல் நிலையங்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)