Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மக்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சக்திகள் தகர்த்தப்பட வேண்டும் - மாமன்னர்

21/03/2026 04:36 PM

கோலாலம்பூர், 21 மார்ச் (பெர்னாமா) --  மக்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு சக்தியும் சமரசமின்றி வேரோடு தகர்த்தப்பட வேண்டும் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தீர்க்கமாகக் கூறியிருக்கின்றார்.

கடந்தாண்டு போலவே, 2026-ஆம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலும், அந்த அறிவுரையை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் மீண்டும் வலியுறுத்தினார்.

பதற்றமான சூழல் அல்லது எச்சரிக்கை நிலை நிலவும்போது, ​​சட்ட நடவடிக்கை உட்பட சமூகத் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மட்டுமே போதாது என்று மாமன்னர் தெரிவித்தார்.

மாறாக, மக்களிடையே நாகரிகப் பழக்கவழக்கங்களை தினசரி செயல்படுத்துவதும், அவற்றை அவ்வப்போது பேணி வளர்த்து தொடர்ந்து நினைவூட்டுவதும் அடங்கும் என்று அவர் மேலும் விவரித்தார்.

மற்ற நாடுகள் போரை எதிர்கொண்டு வரும் வேளையில், மலேசியாவில் நிலவும் அமைதியான சூழலுக்கு நாட்டு மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அறிவுறுத்தினார்.

மேலும், அதிகாரிகளால் கையாளப்படும் நுட்பமான பிரச்சனைகளும் விவேகமானதாகவும், தவறுகள் ஏற்படாமல் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இஸ்தானா நெகாராவில் உள்ள முதன்மை பள்ளிவாசலில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் Sசுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா சாரித் சொஃபியாவும் நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டனர்.

இச்சிறப்பு தொழுகையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் அவரின் துணைவியார் டத்தின் ஶ்ரீ ஹமிடா காமிஸும் கலந்துகொண்டனர்.

தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்ஃகிப்ளி அஹ்மட், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உட்பட பலரும் இத்தொழுகையில் பங்கேற்றனர்.

மோதல் மற்றும் போர் காரணமாக நிலவும் நிச்சயமற்ற உலகச் சூழ்நிலையைத் தொடர்ந்து, மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும், தங்கள் செலவுகளில் வரம்பு மீறாமல் இருக்கவும் இத்தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற சொற்பொழிவின் மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)