Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

தெலுங்கு சமூகத்தினரின் உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

20/03/2026 02:29 PM

செலாயாங், 20 மார்ச் (பெர்னாமா) --  தெலுங்கு சமூகத்தினரின் புதிய தொடக்கத்திற்கும், நல்வாழ்விற்கும் அடையாளமாக கருதப்படும் 'உகாதி' பண்டிகையை முன்னிட்டு, நேற்று நாட்டிலுள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

அந்நன்னாளை வரவேற்கும் விதமாக சிலாங்கூர், செலாயாங் பாருவில் அமைந்துள்ள ஶ்ரீ ராமர் ஆலயத்திலும், மலேசிய தெலுங்கு அறக்கட்டளை மற்றும் மலேசிய தெலுங்கு நலவாழ்வு மற்றும் கலாச்சார சங்கமும் இணைந்து உகாதிக்கான சிறப்பு வழிபாட்டை நடத்தின.

முன்னோர்களின் காலத்திலிருந்தே இவ்வாலயத்தில் உகாதி பண்டிகைக்கான சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுமார் 30 முதல் 40 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் அவை தொடரப்பட்டு வருகின்றது.

இந்நன்னாளை முன்னிட்டு ஆலயங்களில் நடத்தப்படும் இதுபோன்ற சிறப்பு வழிபாடுகளின் வழி மக்கள், குறிப்பாக தெலுங்கு சமூகத்தினரை ஒற்றிணைக்கவும் அவர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கவும் வழிவகுப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

''இவ்வாண்டு மிக சிறப்பானதாக அமைய வேண்டும். பல போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் கூட தெலுங்கு சமுதாயத்திற்கு நல்ல காலம் பிறக்க வேண்டும். அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்'', என்றார் அவர்.

மலேசிய தெலுங்கு அறக்கட்டளையும், மலேசிய தெலுங்கு நலவாழ்வு மற்றும் கலாச்சார சங்கமும் இணைந்து இந்த சிறப்பு வழிபாட்டை ஏற்பாடு செய்திருந்தாலும் கூட சமூகப் பங்கேற்பிற்கு வழிவிடும் வகையில் அவை சமுதாய பூஜையாக நடத்தப்பட்டதாக, மலேசிய தெலுங்கு அறக்கட்டளையின் தலைவர் டத்தோ டாக்டர் காந்தாராவ் அக்குநாயுடு தெரிவித்தார்.

''மலேசிய தெலுங்கு அறக்கட்டளை மற்றும் மலேசிய தெலுங்கு நலவாழ்வு மற்றும் கலாச்சார சங்கத்தின் உறுப்பினர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, முதலில் வந்தவர்கள் ஓமத்தில் கலந்து கொண்டு பூஜைகளை ஏற்றி நடத்தினர். அதோடு, இன்று தொடங்கி ராம நவாமி பிறந்திருக்கின்றது. எனவே, பண்டிகையோடு இணைந்து இது வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, தெலுங்கு சமூகத்தின் பாரம்பரியத்தை இன்றைய இளைஞர்கள் நன்கறிந்து வைத்திருப்பதாகவும், உகாதி பண்டிகைக்கான சிறப்பு மற்றும் அதன் பெருமை குறித்தும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.

மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட உகாதி பண்டிகைக்கான இந்த சிறப்பு வழிபாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)