Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டு செயலாளர் அலி லரிஜானி உயிரிழந்தார்

18/03/2026 04:07 PM

ஈரான், 18 மார்ச் (பெர்னாமா) -- ஈரானின் பாதுகாப்பு தலைமைச் செயலாளர் அலி லரிஜானி உயிரிழந்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மன்றம் உறுதிப்படுத்தியது.

லரிஜானியின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என்று குறிப்பிட்ட ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

1958-ஆம் ஆண்டு ஈராக்கின் நஜாஃப் நகரில் லரிஜானி பிறந்தார்.

1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, ஈரானிய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான ஈரானிய இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனம், ஐ.ஆர்.ஐ.பி ஆகியவற்றில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டில், தேசியப் பாதுகாப்புக் மன்றச் செயலாளராகவும் ஈரானின் அணுசக்தி தொடர்பான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராகவும் லரிஜானி நியமிக்கப்பட்டு, 2007-ஆம் ஆண்டில் அப்பதவியிலிருந்து விலகினார்.

அவர் 2008-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நுழைந்து, தொடர்ந்து மூன்று தவணைகளாக அதன் சபாநாயகராகப் பணியாற்றினார்.

2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், லரிஜானி தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டு, ஈரானின் தலைமைத்துவத்தில் மறுபடியும் ஒரு முக்கிய நபராக ஆனார்.

ஈரான் மீதான தொடர் தாக்குதல்களில் லரிஜானியை இஸ்ரேல் கொன்றுவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)