Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நோன்புப் பெருநாள் பயணங்களுக்காக 50% டோல் கழிவு

17/03/2026 04:59 PM

கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) --  நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் மடானி அரசாங்கம் டோல் சேவைக்கு 50 விழுக்காட்டு கழிவை வழங்குகிறது.

மக்கள் மத்தியில் குறிப்பாக பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ள செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சியாக, இம்முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்பை தொடர்ந்து, நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்காக இரண்டு கோடியே 10 லட்சத்து 30,000 ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஏற்றுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் கூறினார்.

மார்ச் 18-ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மணி 12.01-இல் இருந்து மார்ச் 19-ஆம் தேதி வியாழக்கிழமை பின்னிரவு மணி 11.59 வரை இக்கழிவு வழங்கப்படுகிறது.

Bangunan சுல்தான் இஸ்கண்டார் மற்றும் தஞ்சோங் குபாங் டோல் சாவடி, மலேசியா-சிங்கப்பூர் இரண்டாம் பாதை, LINKEDUA ஆகியவற்றை தவிர்த்து அனைத்து டோல் சாவடிகளிலும் முதலாம் வகுப்பு வாகனங்களுக்கு இக்கழிவு வழங்கப்படுகிறது.

மற்றொரு நிலவரத்தில், ‘fast track’ எனப்படும் விரைவான திவால்நிலை நிவாரணத் திட்டத்தை மலேசிய திவால் துறையின் மூலம் அரசாங்கம் செயல்படுத்தவுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்கள் குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் உட்பட 4,000 பேர் இத்திட்டத்தில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

அனைவரும் இணைந்து உழைத்து உருவாக்கிய செழிப்பின் பலன்களை மக்கள் தொடர்ந்து அனுபவிப்பதை உறுதி செய்வதில், மடானி அரசாங்கத்தின் மையக் கொள்கைகளாக விளங்கும் பரிவு மற்றும் மனிதாபிமான கூறுகளின் வெளிப்பாடாகவே இந்நடவடிக்கை அமைவதாக அன்வார் விவரித்தார்.

அதைத் தவிர்த்து, ரமலான் மாதம் மற்றும் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னிட்டு மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மடானி அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)