சுங்கை சிப்புட், 16 மார்ச் (பெர்னாமா) -- பேராக், சுங்கை சிப்புட்டில் 'SIME DARBY' நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 ஏக்கர் நிலத்தில் குடியேற்ற விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள நில அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் மேற்கொண்ட 27 ஆண்டுகளாக போராட்டத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், அவ்விவகாரம் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசனின் கவனித்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக தேசிய தோட்டத் தொழிற்சங்க செயலாளர் எம். குணாசன் கூறினார்.
சுங்கை சிப்புட்டில் உள்ள 39 தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிலத்தை ஒதுக்கீடு செய்தும், அதில் குடியேற்ற விரைவு நடவடிக்கை மேற்கொள்ளாதது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக எம். குணாசன் கூறினார்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து டத்தோ அ.சிவநேசனிடம் கொண்டு சென்றதும், அதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அவர் நில அலுவலக அதிகாரியைப் பணித்துள்ளதும் தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக குணாசன் தெரிவித்தார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நிலத்தில் அடிப்படை பணிகளைத் தொடங்கவும், இவ்வாண்டு தீபாவளிக்குள் அந்நிலத்தை தொழிலாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நில அலுவலக அதிகாரியிடம் டத்தோ அ.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
இன்று, பேராக், ஈப்போவில் உள்ள Indera Mulia அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர்கள் அதனை கூறினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)