கோலாலம்பூர், மார்ச் 12 (பெர்னாமா) -- நாட்டில் உணவுப் உத்தரவாதத்தை வலுப்படுத்தும் முயற்சிக்கு ஏற்ப, 2024-ஆம் ஆண்டில் 67.8 விழுக்காடாக இருந்த பன்றி இறைச்சியின், எஸ்.எஸ்.ஆர் எனப்படும் தேவையை சுயமாக பூர்த்தி செய்யும் விகிதத்தை, 2030-ஆம் ஆண்டுக்குள் 90 விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்நாட்டு தேவையின் ஒரு பகுதியாக, இறக்குமதி விநியோகத்தைச் சார்ந்திருப்பதை அந்த விகிதம் காட்டுவதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் கூறினார்.
"உலகளாவிய கால்நடை விலை ஏற்ற இறக்கங்களால் உற்பத்திச் செலவுகள் மற்றும் சந்தை விலைகளில் ஏற்படும் தாக்கங்களை நிவர்த்தி செய்ய, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, கால்நடை சேவை துறையின் மூலம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. பண்ணையில் உள்ள உயிருள்ள பன்றிகளின் விற்பனை மற்றும் அதிகரிக்கும் கால்நடையின் குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்," என்றார் அவர்.
நேற்று, மேலவையில் கேள்வி பதில் நேரத்தின்போது, 2025-ஆம் ஆண்டில் பன்றி இறைச்சிக்கான எஸ்.எஸ்.ஆர் மற்றும் சந்தையில் பன்றி இறைச்சி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து, செனட்டர் டத்தோ வூ ஹிம் வேன் எழுப்பிய கேள்விக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)