Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சம்ரி வினோத்தை மிரட்டியதாக ஆடவர் கைது

08/03/2026 06:42 PM

பினாங்கு, 08 மார்ச் (பெர்னாமா) -- சமய போதகர் சம்ரி வினோக்கு எதிரான மிரட்டல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க அச்சந்தேக நபர் இன்று அதிகாலை புக்கிட் மெர்தாஜாமில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவம் குறித்து சம்ரியிடமிருந்து போலீசாருக்கு ஒரு புகார் கிடைத்ததாகவும், அது செபராங் பிறை தெஙா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டதாகவும் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​அவர் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506 மற்றும் செக்‌ஷன் 427-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அசிசி தெரிவித்தார்.

முன்னதாக, தனது வாகனத்தை பல ஆடவர்கள் நெருங்கி வருவதையும், பின்னர் இரண்டு ஆண்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் அருகில் வந்து தமது வாகனத்தை மோதும் காட்சிகளையும் கொண்ட 19 வினாடிகள் காணொளி ஒன்றை சம்ரி தமது முகநூலில் பதிவேற்றியிருந்தார்.

இந்நடவடிக்கை, அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய வழிபாட்டுத் தலத்தின் பிரச்சனை குறித்து ZAMRI பேசியது தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)