Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான தளமாக சேலை நடைப்பயணம்

08/03/2026 07:02 PM

கோலாலம்பூர், மார்ச் 08 (பெர்னாமா) -- வீடு, அலுவலகம், பணியிடங்கள் என்று ஒவ்வோர் நாளும் பம்பரம் போல் சுழலும் பெண்களுக்குத், தங்களைப் பற்றி சிந்திப்பதற்கு இடைவெளியும் சிறந்த ஒரு தளமும் தேவைப்படுகிறது.

அந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் சமூக பிணைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு SAREE WALKATHON எனப்படும் சேலை நடைப்பயணம் இரண்டாவது முறையாக, இன்று, கோலாலம்பூர், பொட்டானிகல் கார்டனில் நடைபெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த சேலை நடைப்பயணம் நடத்தப்படுகிறது.

கலாச்சார பெருமை, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் பெருமையைக் கூறும் விதமாக நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் இந்தியா உட்பட சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறு வயது முதல் முதியவர்கள் வரையிலானோர், உற்சாகத்துடன் கலந்து கொண்டதாக ஏற்பட்டாளரான, Nutri Heart தோற்றுநர் ரூபாலி தெக்கின்மணி தெரிவித்தார்.

''இந்த ஆண்டு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நடைப்பயணத்தின் தூரம் 2 கிலோமீட்டர். மூத்த பங்கேற்பாளருக்கு பரிசு உள்ளது. அவருக்கு 84 வயது. அவர் மற்ற பெண்களுக்கு ஓர் ஊக்குவிப்பாக இருப்பார்,'' என்றார் அவர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் ஒத்துழைப்புடன் Nutri Heart ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்திற்கு பங்கேற்பாளர்கள் சேலை அணிந்து வருகைப் புரிந்திருந்தனர்.

''இந்த நிகழ்ச்சியை Nutri Heart உடன் இணைந்து நடத்த பெருமைப்படுகிறோம். ஆரோக்கியத்துடன் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு மிகச் சிறந்த வழியாகும்,'' என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் இயக்குநர் விஜயலட்சுமி சுந்தர்ராஜன் கூறினார்.

காலை பொழுதில் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.

இந்தியர்களின் பாரம்பரியத்தை கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் சேலையை, மலேசியா, இந்தியா மட்டுமல்லாது சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு வகையில் அணிந்து வந்திருப்பதைக் காண்பதற்குப் பெருமையாக இருப்பதாக சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

''கடந்த ஆண்டு வந்திருந்தோம். இந்த ஆண்டும் நிகழ்ச்சியி சிறப்பாக அமைந்திருக்கின்றது,'' என்று கூறினர்.

சேலை அணிந்திருந்த வெளிநாட்டினர், அதன் அழகையும் தனித்துவத்தையும் பாராட்டி, தங்களின் அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

''முதல் முறையாக சேலை அணிகிறேன். மிகவும் அழகாக உள்ளது. இதை அணிந்த பிறகு, நானும் அழகாக உள்ளேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. அழகாக இருக்கிறது.எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நிறைய வண்ணங்களில், சேலைகள் உள்ளன,'' என்று அமெரிக்காவைச் சேர்ந்த டஜானே அலெக்சிஸ் குரூஸ் தெரிவித்தார்.

நிறைய வகையில், வண்ணங்களில், வடிவில் சேலைகள் உள்ளன. முதல் முறையாக சேலை அணிகிறேன்,'' என்று ஜப்பானைச் சேர்ந்த யுயாமா செய்னா கூறினார்.

காலை மணி ஏழு அளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி சுமார் 11 மணி அளவில் நிறைவடைந்தது.

மற்றொரு நிலவரத்தில், இன்றையக் காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராகவும், சமயங்களில் ஆண்களைக் கடந்தும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்திருப்பது மறுப்பதற்கில்லை.

சாதனைகளும் வெற்றிகளும் ஒரு புறம் இருந்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதிலும், அவர்களின் பொறுப்பும் அன்பும் அளப்பரியது.

பெண்கள் முக்கியப் பொறுப்புகளைக் கொண்டிருக்கும் போது, எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களை இன்னும் ஊக்கத்துடனும் தைரியத்துடம் செயல்பட வைக்கும் என்று இன்று அனுசரிக்கப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

''இன்னும் நிறையப் பெண்கள் வெளி உலகிற்கு வர வேண்டும். இன்னும் நிறைய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்,'' என்றக் கருத்து முன் வைக்கப்பட்டது.

சமுதாயத்தில் பெண்களுக்கான சுதந்திரம், அவர்களுக்கு இருக்கும் தைரியம், அங்கீகாரம் குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)