காஜாங், 08 மார்ச் (பெர்னாமா) -- கருணை நிறைந்த புனித ரமலான் மாதத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை மனிதநேய உணர்வோடு பல தரப்பினர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சிலாங்கூர், ஹுலு லங்காட் மாவட்டத்தில் உள்ள பி40 குழுவைச் சேர்ந்த முதியவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் வசதி குறைந்த சுமார் 480 பேருக்கு, தலா 150 ரிங்கிட் உதவித் தொகை உட்பட ஒரு மூட்டை அரிசி வழங்கப்பட்டதாக, காஜாங் மஸ்ஜிட் இந்தியாவின் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் பி.வி அப்து கூறினார்.
ரமலான் மாதத்தின் நிதி சுமையைக் குறைக்கும் நோக்கில் கடந்த 32 ஆண்டுகளாக தங்கள் தரப்பு இந்நலத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாக, டத்தோ அப்துல் ஹமிட் கூறினார்.
“ரமலான் மாதத்தில் நிறைய அரசு சார்பற்ற அமைப்புகள், தொழிலதிபர்கள் இந்த முயற்சியை செய்து வருகின்றனர். அந்த வகையில் எசான் குழுமமும் இந்த நிகழ்ச்சியை செய்வதற்கான வாய்ப்பு வழங்கிய கடவுளுக்கு நன்றி. இவ்வாண்டு நாடு தழுவில் நிலையில் சுமார் நான்கு முதல் 5,000 பேருக்கு பொட்டலங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். ஏறக்குறைய 3,000 பேருக்கு வழங்கி விட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் எஞ்சியவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்”, என்றார் அவர்.
உலு லங்காட்டைத் தவிர ஜோகூர், மலாக்கா, பேராக், பகாங் மற்றும் பினாங்கு உள்ளிட்ட பல மாநிலங்களில் Jelajah Ihya Ramadan திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், அதன் மூலம் நாடு தழுவிய நிலையில் சுமார் நான்கு முதல் ஐந்தாயிரம் பேர் பயனடைந்ததாக, Ehsan குழும நிறுவனத்தின் தோற்றுநருமான அவர் கூறினார்.
ரமலான் மாதத்தில் சுமையைக் குறைக்க, உதவித் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் சமூக பொறுப்பை உணர்ந்து தனியார் நிறுவனங்கள் செயல்பட முன்வர வேண்டும் என்று அப்துல் ஹமிட் வலியுறுத்தினார்.
நேற்று, சிலாங்கூர், காஜாங், மஸ்ஜிட் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட Ihya Ramadan நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)