கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- உலக அளவில் பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவும் பொருட்டு, இன்று தொடங்கி வரும் மார்ச் எட்டாம் தேதி வரையில் கோலாலம்பூர்-லண்டன், ஹீத்ரோ மற்றும் கோலாலம்பூர்- பாரிஸ், சார்ல்ஸ் டி கோலேக்கு, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடுதல் விமானப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வழித்தடங்களுக்குக் கூடுதல் விமான பயணங்களைச் செயல்படுத்துவதன் மூலம் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கவும் அவர்களின் அடுத்தடுத்த பயணங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவுவதை மலேசிய ஏர்லைன்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கும் வகையில் கவனமாக திட்டமிடப்பட்ட மாற்று பாதைகள் வழியாக இச்சேவை இயங்கும் என்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியது.
A350-900 விமானங்கள் உட்பட கூடுதல் விமானங்களுடன் வழக்கம்போல் தினசரி சேவையை மலேசிய ஏர்லைன்ஸ் வழங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)