Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கூடுதல் எடை கொண்ட லாரி; அமலாக்க அதிகாரிகளுக்கு இடைத்தரகர்கள் லஞ்சம்  

04/03/2026 06:44 PM

புத்ராஜெயா, மார்ச் 04 - கூடுதலான எடையுடைய லாரிகளுக்கான குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கும் இடைத்தரகர்களின் கூட்டம் ஒன்றை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் அடையாளம் கண்டுள்ளது. 

கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கிய சிறப்பு Ops Middleman நடவடிக்கையில் இடைத்தரகர்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உட்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிக சுமை ஏற்றும் லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க ஓர் இடைத்தரகர் கும்பல் செயல்பட்டு வருவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் தலைமை  ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.  

"தங்களின் செயல்பாடுகளை எளிதாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி அவர்கள் ஊழல் புரிவதற்கு இடைத்தரகர்கள் காரணமாக உள்ளனர். இது சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. இதனால் அதிக சுமை கொண்ட லாரிகளை நெடுஞ்சலையில் செல்ல வைப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்களால் மேற்கொள்ள முடியும்,'' என்றார் அவர்.

2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 17 உட்பிரிவு (a) மற்றும் அதே செக்‌ஷன் உட்பிரிவு (b)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

இதனிடையே, அச்சோதனை நடவடிக்கையின் வழி சுமார் 77 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய கணக்குகளை எஸ்.பி.ஆர்.எம்முடக்கியதுடன் பறிமுதலும் செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)