தெஹ்ரான், 02 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் உயர் ஆட்சியாளர் அயதொல்லா அலி கமெனெய் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில், தங்கள் தரப்பு அரசதந்திரத்தை எப்போதும் வரவேற்பதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில், திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று அவர் சாடினார்.
''ஈரான் எப்போதும் அரசதந்திரத்திற்கு உடன்படும். அதில் எங்களுக்கு மிகச் சிறந்த பதிவு இருப்பதாக நான் நினைக்கிறேன். அமெரிக்கர்களைப் போல் இல்லாமல், அவர்களின் தாக்குதல் மிகவும் மோசமானது மற்றும் மிகவும் எதிர்மறையானது. அமெரிக்கர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவது இது இரண்டாவது முறை. பேச்சுவார்த்தையின் நடுவே அவர்கள் எங்களைத் தாக்க முடிவு செய்தனர்,'' என்றார் அவர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள அவரின் மைய வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 86 வயதான கமெனெய் பலியானதாக ஈரானிய ஊடகம் நேற்று அறிவித்தது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய இத்தாக்குதல், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பல ஆண்டுகளாக தோல்வியடைந்து வரும் அரசதந்திர முயற்சிகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
எனினும், ஈரானின் தாக்குதல்கள் தற்காப்பு நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுவதாக அராக்ஷி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலினால், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியில் முற்றாக சேதமடைந்தது.
இதில் 165 பேர் பலியானதாக ஈரான் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் இத்தாக்குதல் மனிதாபிமானமற்றது என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் சாடியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடி உதவிகளை வழங்க அவர் அதிகாரிகளுக்கு உத்ரவிட்டுள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]