பச்சோக், மார்ச் 01 (பெர்னாமா) -- அரசாங்கத்தை கவிழ்க்கவும் நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கவும் சதித்திட்டம் தீட்டியதாக வழங்கப்படும் ஒவ்வொரு புகாருக்கும் முன்னுரிமை அளித்து முழு கவனம் செலுத்துமாறு அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எந்தத் தரப்பிலிருந்து புகார் கிடைத்தாலும், பி.டி.ஆர்.எம் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து விசாரணை செயல்முறை தொடங்கப்பட்டதாக தேசிய போலீஸ் படை தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் வெளியிட்ட அண்மைய அறிக்கையை சைஃபுடின் நசுத்தியோன் சுட்டிக்காட்டினார்.
புகாரின் நோக்கத்தையும், விசாரணையின் இறுதி முடிவையும் அடையாளம் காண்பது முக்கியம் என்று அவர் விவரித்தார்.
அரசாங்கத்தை கவிழ்க்கவும், நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கவும், அனைத்துலக ஊடக நிறுவனத்துடன் இணைந்து செல்வாக்கு மிக்க உள்நாட்டவர் ஒருவர் முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமது தரப்பு புகார் பெற்றதாக முஹமட் காலிட் முன்னதாக தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)