ஈப்போ, பிப்ரவரி 17 (பெர்னாமா) -- பேராக், ஈப்போவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில், கம்போங் மஞ்சோய், கம்போங் தெங்கு உசேன், மேரு ராயா, புந்தோங் உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
பலரின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பி 40 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்க தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
அதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகள் கிடைப்பதற்கு போலீஸ் புகார் செய்யும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக, ஈப்போவில் இதே போன்ற வெள்ள நிலைமை ஏற்பட்டது.
எனினும், இம்முறை பாதிப்பு சற்று கூடுதலாக இருப்பதாக இந்தியர் குடியிருப்பு பகுதியான கம்போங் தைலியில் பல ஆண்டு காலமாக வசித்து வரும் சிவகாமி தெரிவித்தார்.
மேலும், தமது மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வரும் மிடா அமிட், தாம் எதிர்நோக்கி வரும் சிக்கலை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
''எனக்கும் உடல் நலம் சரியில்லை. இந்தச் சூழ்நிலையில் சமாளிப்பது சவாலாக இருக்குகிறது. அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார் அவர்.
இக்குடியிருப்புப் பகுதியில் ஏறக்குறைய 30 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தங்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன,
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)