Ad Banner
Ad Banner
 பொது

கணவருடன் சீனப் பாரம்பரியத்தில் திளைக்கும் புஷ்பராணி

17/02/2026 07:42 PM

பத்து கேவ்ஸ், பிப்ரவரி 17 (பெர்னாமா) --  நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை இனத்தவரான சீனர்கள், பாம்பு ஆண்டுக்கு விடை கொடுத்து இயக்கம், ஆற்றல், விசுவாசம் மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் குதிரை ஆண்டை இவ்வாண்டு உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

சிவப்பு வண்ண விளக்குகள், அலங்காரங்கள், வீட்டு வாசலில் மென்டரின் ஆரஞ்சுப் பழ மரம், கைநிறைய 'அங்-பாவ்' உறைகள் என்று சீனர்கள் வீடுகள் இந்நாளில் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். 

அதே களிப்பில் திளைத்துள்ள பத்து கேவ்ஸ், கம்போங் லக்சமணாவைச் சேர்ந்த புஷ்பராணி கிருஷ்ணன், சீனரான லியோங் யீ ஃபூவை திருமணம் புரிந்தது முதல், கடந்த 13 ஆண்டுகளாக  தீபாவளியைப் போன்று சீனப் புத்தாண்டையும்
அதன் கலாச்சாரம் மாறாது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். 

சீனப் புத்தாண்டிற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே வீடுகளில் வண்ண சாயங்கள் பூசப்பட்டு பெருநாள் அலங்கார வேலைகள் தொங்கவிடும் என்று புஷ்பராணி கூறினார்.

சீனப் புத்தாண்டை வரவேற்க முதல் அம்சமே ஆரஞ்சுப் பழங்களின் அலங்காரங்கள் என்று அவர் விவரித்தார். 

அதன் பின்னர், புத்தாண்டின் முதல் நாளில் குடும்ப முன்னோர்களின் ஆசியை 
பெறும் வகையில் அவர்களுக்கு விருப்பமான உணவுப் படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படும் என்றார் அவர். 

தமது வாழ்நாளில் தீபாவளியை மட்டுமே கொண்டாடி வந்த தமக்கு திருமணத்திற்குப் பின்னர் கணவரின் இல்லத்தில் முதல் முறையாக சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய அனுபவம் மறக்க முடியாது என்று புஷ்பராணி குறிப்பிட்டார். 

அங்கு தாம் கற்றுக் கொண்ட அனைத்து மரபினையும் பின்பற்றி கடந்த 13 ஆண்டுகளாக சீனப் புத்தாண்டை  குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்வதாக புஷ்பராணி கூறினார்.

சீனர்களின் கலாச்சாரத்தில் வேர்க்கடலைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதால், அது சார்ந்த பலாக்காரங்களையே அவர்கள் அதிகம் விரும்புவதாக புஷ்பராணி தெரிவித்தார்.

சீன மொழி தமக்கு நன்றாகப் புரிந்தாலும், இன்னும் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய புஷ்பராணி, ஆனால் தம்மிரு பிள்ளைகளும் அவ்விரு மொழியுடன் சேர்ந்த மலாய், ஆங்கிலத்தையும் சரளமாகப் பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, MAKAN BESAR  எனப்படும், ஆண்டுக்கு ஒருமுறை சொந்தங்கள் அனைத்தும் ஒன்றாகக் கூடி உணவருந்தும் அந்த முறை இவ்வாண்டு செய்ய முடியாதது வருத்தமளிப்பதாக  லியோங் யீ ஃபூ தெரிவித்தார்.

"நாங்கள் அம்மா வீட்டிற்குச் சென்றால் அங்கு உடன்பிறப்புகளுடன் கூடிக் களிப்புற்று உணவு உண்போம். மீன் ஸ்டீம், கோழி உள்ளிட்ட பல வகைப் பாரம்பரிய உணவு தயார் செய்யப்படும். எல்லோரும் மகிழ்ச்சியோடு இருப்போம். இம்முறை கிராமத்திற்குச் செல்லவில்லை. காரணம் பெற்றோர் காலமாகிவிட்டனர். எனவே நாங்கள் இங்குதான் பெருநாள் கொண்டாடுவோம்," என்றார் அவர்.

வழக்கம் போல இவ்வாண்டு சீனப்புத்தாண்டிலும் தங்களுக்கு நிறைய அங் பாவ் கிடைத்ததாக புஷ்பாராணியின் பிள்ளைகளான லியோங் வென் ஸி @ சாய் மீரா & லியோங் ஜியா ஸுன் @ காசுன் ஆகியோர் தெரிவித்தனர். 

தொடக்கத்தில், இப்பெருநாள் குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்றாலும் மகளை மணம் முடித்து கொடுத்தது முதல் தாமும் சம்பந்தி வீட்டாருடன் இணைந்து அவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றி இப்பெருநாளை கொண்டாடுவதாக புஷ்பாவின் தந்தையான 69 வயதுடைய கிருஷ்ணன் சகாதேவன் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)