ஷா ஆலம், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்று, சிலாங்கூர், ஷா ஆலம் செக்ஷன் 7-இல் உள்ள பெர்சியாரான் துன் அர்ஷாட் அயூப் எனும் இடத்தில் MPV ரக கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததில், அதில் பயணித்த இரண்டு பெண்கள் காயங்களுக்கு ஆளாகினர்.
சம்பவம் குறித்து தங்கள் தரப்பிற்கு நண்பகல் மணி 12.11 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
இச்சம்பவத்தில் 39 மற்றும் 42 வயதான இரு பெண்கள் பாதிக்கப்பட்டதாக, அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு முகம் மற்றும் தலையிலும், மற்றொருவருக்கு இடுப்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர் சிகிச்சைக்காக அவ்விருவரும் ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காரில் சிக்கிக் கொண்ட பெண்களை மீட்க ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 12 அதிகாரிகளும் பணியாளர்களும் இரண்டு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)