Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.எச்.எம்.எம்.பி நடைமுறைக்கு இணங்குமாறு வியாபாரிகள் & சில்லறை விற்பனையாளர்களுக்கு நினைவூட்டு

16/02/2026 04:22 PM

ஜாலான் புக்கிட் கியாரா, 16 பிப்ரவரி (பெர்னாமா) --  2026 சீனப் புத்தாண்டை முன்னிட்டு பெருநாள் கால அதிகபட்ச விலைத் திட்டம், எஸ்.எச்.எம்.எம்.பி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ​​அதன் நடைமுறைக்கு தொடர்ந்து இணங்குமாறு வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

விதிமீறல் குற்றத்தைச் செய்யும் எந்தவொரு வியாபாரியும், 2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம், AKHAP-இன் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதோடு, நியமிக்கப்பட்ட பிரிவின்படி ஒரு லட்சம் ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கோலாலம்பூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் கே.எல்-லின் இயக்குநர் முஹமட் சப்ரி செமான் தெரிவித்தார்.

பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் தொடரும், இந்த அதிகபட்ச விலைத் திட்டத்தின் கீழ் விதிமீறலை உள்ளடக்கி கோலாலம்பூரில் 7 வழக்குகள் பதிவாகியுள்ளன.

"இது எங்களுக்குப் புதிய விஷயம் அல்ல. இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும் ஏதேனும் விதிமீறல்களைக் கண்டறியப்பட்டால், கே.பி.டி.என் கே.எல். தயங்காமல், உடனடியாக கடுமையான நடவடிக்கையை எடுக்கும்", என்றார் அவர்.

விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இளஞ்சிவப்பு விலைப் பட்டியலை காட்சிப்படுத்தப்படுத்த தவறிய ஐந்து வழக்குகளும் அடங்கும் என்று முஹமட் சப்ரி கூறினார்.

தனிநபர் வகை குற்றங்களுக்கு, நீதிமன்றம் 10 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5,000 ரிங்கிட் வரை சம்மன்களும் விதிக்கப்படலாம்.

நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 10,000 ரிங்கிட் வரை சம்மன்களும் விதிக்கப்படலாம்.

இதனிடையே, காலாவதியான மற்றும் சில்லறை விற்பனையாளரால் முத்திரையிடப்படாத எடையிடும் கருவிகள் தொடர்பான இரண்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இன்று, கோலாலம்பூரில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 எஸ்.எச்.எம்.எம்.பி-யின் அமலாக்க இணக்கம் தொடர்பான கண்ணோட்டத்தை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் சப்ரி அதனைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)