Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மகத்துவம் நிறைந்த மகாசிவராத்திரி

16/02/2026 03:10 PM

பங்சார், 16 பிப்ரவரி (பெர்னாமா) --  அபாயம் நீங்கி உபாயம் தரும் இரவு மகாசிவராத்திரி.

உலகை ஆளும் சக்திகளுக்கு நவராத்திரி எத்தகைய சிறப்பு வாய்ந்ததோ, அதுபோல பிரபஞ்சத்தின் பரம்பொருளான மகேஸ்வரனின் சிவராத்திரி மனித குலத்தின் பாவங்களைப் போக்கி புனிதத்தைச் சேர்க்கும் சிறப்புகள் வாய்ந்தது.

இந்நாளை உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், குறிப்பாக சிவ பக்தர்கள் அவனருள் வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வர்.

அவ்வகையில், கோலாலம்பூர், பங்சாரில் வீற்றிருக்கும் ஶ்ரீ காசி விசாலாட்சி சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலிலும், நேற்று மகாசிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை மணி 7-க்குப் பிறகு ஆலயத்தின் வழக்கமான பூஜைகள் தொடங்கிய வேளையில், இரவு 8 மணிக்கு மகா சிவராத்திரியின் முதலாம் கால பூஜை பக்தர்கள் புடை சூழ இனிதே தொடங்கியது.

பஞ்சாட்சர மந்திரங்கள் ஒலிக்க, பூஜைகளுடன் ஈசனுக்கு மகா அபிஷேகங்கள் செய்யப்பட்ட வேளையில், ஆலயத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாரம், திருப்புகழ், திருவாசகம் மற்றும் திருவெம்பாவை என்று சிவன் புகழ் பாடி பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர்.

நான்கு கால பூஜைகளிலும் லிங்கத் திருமேனிக்கு பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், திருநீறு, சந்தனம், நெல்லிப்பொடி ஆகிய அபிஷேகப் பொருட்களை வழங்கி பக்தர்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டதைக் காண முடிந்தது.

விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்பவர்களுக்குக் கர்மவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை என்பதால் பக்தர்கள் இந்த ஒரு நாள் இரவில் தூக்கத்தை தியாகம் செய்து சிவபெருமானை வழிபடுவதாக, ஆலயத்தின் தலைவரும் குருக்களுக்குமான சக்தி சுப்ரமணியம் தெரிவித்தார்.

''இந்த சிவராத்திரியை நாம் நான்கு காலமாக பிரித்திருக்கின்றோம். முதல் காலம், சிவனுக்கான அபிஷேக பூஜைகள் நடைபெறும். இரண்டாம் கால பூஜை சிவனுக்கும் லிங்கோத்பவருக்கும். மூன்றாவது காலம், காசி விஸ்வநாதர் சுவாமிக்கும், விசாலாட்சி அம்பாள் மற்றும் ராஜதேவி ஆகிய மூவருக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். பின்னர், சங்கோடு சேர்ந்தது நான்காம் காலம். எனவே, மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் சிவன் கோயில்களில் குடியிருக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.  

மேலும், சிவராத்திரி விரதத்தின் மூலம் சகல செல்வங்களும் நிறைந்த மங்கள வாழ்வு உண்டாகும் என்பதை சிவபுராணம் கூறுவதாக அவர் கூறினார்.

இதனிடையே, சிவபெருமானின் மீதுள்ள காதலும் பக்தியும் தங்களை ஆண்டுதோறும் இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்துவிடுவதாக பக்தர்களில் சிலர் கூறினர்.

''நான் மூன்றாவது ஆண்டாக வருகின்றேன். நான்கு கால பூஜையிலும் கலந்து கொள்வேன். விடிய விடிய கண்விழித்து அபிஷேகம் பார்க்கும் அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது'', என்றார் பங்சாரைச் சேர்ந்த ராபர்ட் சந்தனசாமி.

''நான் இவ்வாண்டு தான் முதல்முறையாக மகாசிவராத்திரி பூஜையில் கலந்து கொள்கிறேன். அனைத்தும் சிவனுக்காக மட்டும்தான். சிவன் இல்லை என்றால் நாங்கள் இல்லை. எனவே, அவரை பின்தொடர்ந்து நாங்கள் செல்கின்றோம்'', என்று பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த கோமதி எஸ்.சோமசுந்தரம் கூறினார்.

மகாசிவராத்திரி இரவில் கண்விழித்து பக்தியுடன் சிவன் அருளைப் பெறுவதற்காக, நான்கு காலை பூஜைகளில் நான்கு வெவ்வேறு சிவன் ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக, மேலும் சிலர் கூறினர்.

''நான்கு கால பூஜை என்பதால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பூஜைக்கு வெவ்வேறு சிவன் ஆலயங்களுக்குச் செல்வோம். அதிக தூரமாக நாங்கள் சிரம்பான் வரை சென்றிருக்கின்றோம். இப்படியாக ஒவ்வொரு ஆலயங்களுக்குச் சென்று எங்கள் சிவராத்திரி பிரார்த்தனையை நிறைவுச் செய்வோம்'', என்றார் ஶ்ரீ பெட்டாலிங்கைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் காளியப்பன்.

''இதுதான் முதல்முறை நான்கு கால பூஜைக்கும் ஒரே ஆலயத்தில் இருப்பது. ஏனென்றால், மூன்றாம் கால பூஜையின் போது எங்களுடைய உபயம். பொதுவாக நாங்கள் ஒவ்வொரு பூஜைக்கும் வெவ்வேறு ஆலயங்களுக்குச் செல்வோம்'', என்று செராஸைச் சேர்ந்த குமுதமலர் இராமசாமி தெரிவித்தார். 

அதோடு, முழு இறை சிந்தனையுடன், பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து எடுக்கப்படும் சிவராத்திரி விரதம், துயர் நீக்கி நிம்மதி தேடித் தரும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)