முனிக், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக நாட்டில் புதிய தேர்தலுக்கு ஆதரவளிக்கும் தமது உறுதிப்பாட்டை, எதிர்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெளிப்படுத்தியிருக்கின்றார்.
ஜெர்மனி, முனிக்கில் நடைபெறும் உலகளாவிய பாதுகாப்பு மாநாட்டின் போது இயங்கலை வழியாக கொள்கை ஆய்வாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
"எங்களிடம் சட்டபூர்வமான ஒரு தலைமை உள்ளது. ஒன்றுபட்ட எதிர்க்கட்சி மற்றும் எங்களுக்கு அதற்கான ஆதரவு உள்ளது. நான் முன்பு கூறியது போல ஆயுதப் படைகளில் பெரும்பாலானவை. எனவே, ஜனநாயகத்திற்கான மாற்றம் முறையாக இருக்கும். அமைதியாக இருக்கும். அது கூடிய விரைவில் நடந்தவுடன் அது நன்றாக இருக்கும். வெனிசுலா மக்களுக்கு மட்டுமல்ல. இந்த வட்டாரத்திற்கும், அமெரிக்காவிற்கும் கூட", என்றார் அவர்.
இதனிடையே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட அதிபர் டொனல்ட் டிரம்பின் நிர்வாக அதிகாரிகளும் வெனிசுலாவில் புதிய தேர்தல்களுக்கான தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, அவர் கூறினார்.
அதேவேளையில், அரசாங்கம் மாற்றப்பட்டால் வெனிசுலாவில் குழப்பங்கள் ஏற்படும் என்று சில ஆய்வாளர்கள் கூறும் கருத்துகளையும் மச்சாடோ மறுத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)