Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரான் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு: பேரணியால் அதிர்ந்தது ஜெர்மனி

15/02/2026 04:41 PM

ஜெர்மனி, 15 பிப்ரவரி (பெர்னாமா) --  ஈரானின் தற்போதைய ஆட்சியை எதிர்க்கும் விதமாக ஜெர்மனியின் முனிக் நகரில் உள்ள தெரேசியன்வீஸ் பகுதியில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் ஒன்று கூடி பேரணி நடத்தியுள்ளனர்.

முனிக்கில் உலகளாவிய பாதுகாப்பு மாநாட்டிற்காக அனைத்துலகத் தலைவர்கள் பலர் ஜெர்மனிக்கு வருகை அளித்துள்ள நிலையில் மாநாடு நடைபெறும் பகுதிக்கு வெளியே, இந்தப் பேரணி நடத்தப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து ஈரான் மக்களைப் பாதிக்கும் அடக்குமுறை ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

1979-ஆம் ஆண்டு புரட்சிக்கு முந்தைய ஈரான் கொடிகளையும், அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவி படத்துடன் கூடிய பதாகைகளையும் ஏந்தி அவர்கள் பேரணி நடத்தினர்.

அண்மைய ஆண்டுகளில் நகரின் மிகப்பெரிய பேரணியாக இது மாறியுள்ள நிலையில், ஈரான் மக்களுக்கு உதவ அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, செர்பியாவின் வால்ஜெவோ நகரில், நேற்று மாணவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக அமைதி பேரணி நடந்தனர்.

ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நாடு முழுவதும் அண்மைய காலமாக வெடித்து வரும் நிலையில், அதற்கு முழுமையான விசாரணையும் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும் இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)