Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

வட அமெரிக்காவில் தைப்பூசக் கொண்டாட்டம்

15/02/2026 07:46 PM

லான்ஹாம், 15 பிப்ரவரி (பெர்னாமா) --   அமெரிக்காவில் களைக்கட்டிய தைப்பூசத் திருநாள்.

குளிர்காலம் காரணமாக இரு வாரங்கள் கழித்து, திட்டமிட்டப்படி நேற்று வட அமெரிக்காவில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வட அமெரிக்காவின், லான்ஹாம், மெரிலாந்தில் சுமார் 32 ஆண்டு காலமுள்ள முருகன் ஆலயத்தின் தைப்பூசக் கொண்டாட்டத்திற்குப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் உள்ள இந்துக்களை ஒன்றிணைக்கும் விழாக்களில் இந்த தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

அதற்காகவே, ஆண்டுதோறும் வட அமெரிக்காவில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவதாக அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு ஆறுமுகம் கூறினார்.

காலை சுமார் 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், பக்தர்கள் பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தியாக அவர் தெரிவித்தார்.

''தொடர்ந்து இந்த திருவிழாவிற்கு ஆதரவு கொடுங்கள். இது முருகப் பெருமானுக்காக நாங்கள் செய்யும் தைப்பூசத் திருவிழா. நாம் மலேசியாவில் இருந்து வந்தோம். அதேபோல, பல நாடுகளிலிருந்து மக்கள் வந்திருக்கின்றனர். ஆனால், இங்குள்ள மக்களுக்கு இதுதான் முருகன் கோயில் என்பதால் நாங்கள் பல ஆண்டுகளாக தைப்பூசத் திருவிழாவை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றோம்'', என்றார் அவர்.

குளிர்காலத்தையும் பொருட்படுத்தாது, நியூ யார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வர்ஜீனியா, வட கரோலினா, மிச்சிகன் போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக ராமுகூறினார்.

பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றியப் பின்னர், அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், முருகனின் திருக்கல்யாண வைபவம் மற்றும் சாமி புறப்பாடு அங்கத்துடன் தைப்பூசக் கொண்டாட்டம் நிறைவுப் பெற்றிருக்கின்றது.

இதனிடையே, கந்தப் பெருமானின் அருளாலும், வட அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்களின் ஆதரவாலும், ஒரு சிறிய கூட்டமாக தொடங்கிய இவ்விழா தற்போது மிகப் பெரிய ஆன்மீகக் கொண்டாட்டமாக மாறியுள்ளதாக, ராமு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)