Ad Banner
Ad Banner
 பொது

பெர்சத்து மூத்த தலைவர்கள் நீக்கம்; சிறந்த முடிவு - முகிடின்

14/02/2026 05:55 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 14 (பெர்னாமா) -- பெர்சத்துவின் மூத்த தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தற்போதைய சூழலில் சிறந்த முடிவாகும்.

அந்நடவடிக்கை தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை என்று பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் கூறியுள்ளார்.

கட்சி நிலையானதாகவும், வலு நிறைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்ய, ஒழுங்கு நடவடிக்கை என்பது, அதன் அரசியலமைப்பில் ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான தொடர் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் சமரசத்திற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்து கட்சியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், எவ்விதப் பலனும் இல்லை என்று முகிடின் யாசின் கூறினார்.

பெர்சத்து கட்சியின் தலைவர் மற்றும் தோற்றுநர் என்ற முறையில், பெர்சத்து வலுவாக இருப்பதையும் அதன் உண்மையான போராட்டப் பாதையில் பயணிப்பதையும் உறுதி செய்யும் கடப்பாடு தமக்கு உள்ளதாக அவர் விவரித்தார்.

இன்று, சனிக்கிழமை பெர்சத்து உச்சமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் முகிடின் இவ்வாறு தெரிவித்தார்.

தம்மை எதிர்ப்பதாகத் அறிந்தும் சிலருக்கு கட்சித் தலைமைத்துவப் பதவிகளில் அவர் வாய்ப்பளித்துள்ளார்.

இருப்பினும், கட்சியின் அரசியலமைப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு முரணான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று வரை, துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின், உச்சமன்ற உறுப்பினரும், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அஹமட் ஃபைசல் வான் அஹமட் கமல், கிரேக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபத்துல் ஹுசிர் அயோப், மற்றும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேப்டன் அசாரி ஹசான் ஆகியோர் உட்பட 17 உறுப்பினர்களை பெர்சத்து ஒழுங்குமுறை வாரியம் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)