Ad Banner
 பொது

ஆலய விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்பிற்கு மஹிமா இணக்கம்

12/02/2026 08:24 PM

கோலாலம்பூர், 12 பிப்ரவரி (பெர்னாமா) --  நாட்டில் அனுமதியின்றி வழிபாட்டு தலங்கள் கட்டப்படுவது தொடர்பான விவகாரம், அண்மைய காலமாக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எந்தவொரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்ட வட்டமாக கூறினார்.

பிரதமரின் அந்த அறிவிப்பை சர்ச்சையாக எண்ணாமல், நாட்டில் உள்ள ஆலயங்களின் மறுசீரமைப்பு மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக பார்க்க வேண்டும் என்று மலேசிய இந்து ஆலயம், இந்து அமைப்புகளின் பேரவை, மஹிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா வலியுறுத்தினார்.

''அனுமதியின்றி யாரும் கோயில்களை உடைக்க முடியாது. அது தவறான எண்ணம். நல்ல தீர்வுகளைக் காண்போம். அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு என்பதற்கான வழிதான் பிரதமர் வழங்கிய அறிவிப்பு. இதுதான் சரியான நேரம். அரசாங்கத்தின் திட்டத்துடன் இணைந்து கோயில்களை அதிகாரப்பூர்வமாக மாற்றுவது தான் சரியான வழி'', என்றார் அவர்.

தற்போதுள்ள பெரும்பாலான ஆலயங்கள் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் ஆட்சிக் காலத்தின் போது கட்டப்பட்டது என்று நம்பப்படுவதால், அதன் அசல் நிலத்தைத் தக்க வைத்து கொள்வதற்கான உரிமைகளை முறையான ஆவணங்களுடன் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் இந்நடவடிக்கை, நாட்டிலுள்ள வழிபாட்டு தலங்கள் குறித்த முழுமையான புள்ளி விவரங்களையும் தரவுகளையும் உருவாக்க துணைச் செய்யும் என்றும் சிவகுமார் விவரித்தார்.

''இந்த முயற்சியைப் பயன்படுத்து அனைவரும் தங்களின் ஆவணங்களை முறையாக வைத்து கொள்ளுங்கள். கிராமப்புறங்களில் இருக்கும் ஆலயங்களுக்கு. நாம் நமக்கான உரிமையைக் கேட்போம். இந்த தருணத்தைப் பயன்படுத்தி கொண்டு கிராமப்புறங்களின் இருக்கும் ஆலயங்களின் நிலங்களை சொந்தமாக்கி கொள்வற்கான சரியான பரிந்துரைகளை முன்வையுங்கள். அதேபோல, அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கான முறையான ஆவணங்களை அரசாங்கத்திடம் அதன் நிர்வாகம் காண்பிக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, தற்போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் இவ்விவகாரத்தை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு சிறப்பு பணிக் குழு நிறுவப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்தார்.

அதோடு, இடமாற்றம் குறித்த அறிவிப்புகளைப் பெற்ற ஆலய நிர்வாகங்களுக்கு நிலப் பிரச்சனை தொடர்பான வழிகாட்டுதல்களையும் தீர்வுகளையும் வழங்க மஹிமா தயாராக இருப்பதாக சிவகுமார் உறுதியளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)