Ad Banner
 பொது

சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணி நடத்த மறுப்பு

07/02/2026 01:41 PM

கோலாலம்பூர், 07 பிப்ரவரி (பெர்னாமா) --  இன்றிரவு, கோலாலம்பூர், சோகோ பேரங்காடி முன்புறம், GARAH எனப்படும் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உளவுத்துறை விசாரணையை மேற்கொண்டு அப்பகுதியைச் சுற்றியுள்ள வளாகங்களின் உரிமையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்குஸ் தெரிவித்தார்.

பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தொடர்பில் SOGO, Pertama Kompleks, Harissons மற்றும் அருகிலுள்ள வளாகங்களின் உரிமையாளர்களிடமிருந்து தமது தரப்பிற்கு நேற்று ஆட்சேபனை கடிதம் கிடைத்ததாக , இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் டத்தோ ஃபடில் மர்குஸ் கூறினார்.

பண்டிகை காலம் என்பதால் பொருள்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பேரணி நடத்தப்படுவதற்கான பகுதியில் அமைதி மீறல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றிரவு அமைதிப் பேரணியை நடத்துவதற்கான அறிவிப்பு கடிதத்தை அதன் ஒருங்கிணைப்பாளரிடமிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றதாக ஃபடில் கூறினார்.

மேலும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் GARAH பேரணியின் ஏற்பாட்டாளர்களுடன் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)