கோலாலம்பூர், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, மனிதவள அமைச்சின் கீழ் மாற்றப்பட்டாலும் இந்தியர்களின் சமூக - பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதன் அடிப்படை நோக்கம் மற்றும் அதிகாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.
இந்த மாற்றமானது இந்திய சமூகத்தின் நல்வாழ்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை இன்னும் ஒருங்கிணைந்த முறையிலும் அதிக பயன் தரும் வகையிலும் செயல்படுத்த உதவும்.
அதோடு, மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் இந்நடவடிக்கை வலுப்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
"இது தொடர்பில், மித்ராவை மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வருவது அதன் கொள்கைகளைப் பாதிக்காது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருதுகிறார். மாறாக, இந்திய சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டுடன் இணைப்பதன் மூலம் மித்ராவின் செயல்பாடுகளை இது இன்னும் வலிமையாக்கும்," என்றார் அவர்.
வியாழக்கிழமை மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான கேள்வி பதில் நேரத்தின் அங்கத்தின் போது அவர் இவ்விவகாரம் குறித்து விளக்கினார்.
மித்ரா திட்டங்களின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பை இன்னும் முறையான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதை இந்த மாற்றம் உறுதி செய்யும் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
இது மனிதவள அமைச்சின் கீழ் உள்ள வேலைவாய்ப்புத் திறன், திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளோடு ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)