Ad Banner
 சிறப்புச் செய்தி

தைப்பூசத்தில் தூய்மையைப் பேணுவதில் முன்னேற்றம்; இன்னும் ஒத்துழைப்புத் தேவை

04/02/2026 04:40 PM

பத்துமலை, பிப்ரவரி 04 (பெர்னாமா) -- ஒவ்வோர் ஆண்டும், தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் ஆலய தரப்பினர் உட்பட குத்தகையாளர்கள் மற்றும் தன்னார்வ இயக்கங்களும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவதில் இருந்து தவறியதில்லை.

அந்த வகையில் கொண்டாடத்திற்குப் பின்னர், பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும் துப்புரவு பணிகள் தொடர்பில், பெர்னாமா செய்திகள் கண்ணோட்டம் ஒன்றை மேற்கொண்டது.

அதில்,ஆலய வளாகங்களில் தூய்மையைப் பேணுவதில் மக்கள் மத்தியில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிந்தாலும், அவர்களிடம் இருந்து இன்னும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஆலய நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு துப்புரவு பணிகளையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் அதிகப்படுத்தியுள்ளது.

திருத்தலத்தில் உள்ள ஆலய வளாகங்கள், மேல் குகை, படிக்கட்டுகள் என்று குறிப்பிட்ட இடங்களில் குப்பைகளை அகற்றுவது, குப்பைத் தொட்டிகளை வைப்பது என்று பல நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு பின்னால், பலரின் உழைப்பு இருப்பதாக கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மக்கள் தூய்மையை அதிகம் கடைப்பிடித்திருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.

அதே வேளையில், இன்னும் பலர் காலணிகள், பால் குடத்திற்கான பொருட்கள், சிறிய காவடிகளை விட்டுச் செல்லும் செயல்களை இந்தத் தைப்பூசத்திலும் காண முடிந்ததாக டத்தோ சிவகுமார் குறைப்பட்டுக் கொண்டார்.

இதனிடையே, துப்புரவு பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

''அனைவரும் சுத்தமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இதற்கு பின்னால், நிறையப் பேர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் தங்களது வேலையை செய்துக் கொண்டிருக்கும் போது, மக்களில் சிலர் அவர்களிடம் கோபமாக பேசியிருக்கின்றனர்.''

எனவே, அடுத்தடுத்து வரும் தைப்பூசக் காலக்கட்டங்களிலும் மக்கள் தொடர்ந்து தூய்மையைக் கடைப்பிடித்து வந்தால், ஆலய வளாகத்தில் பெரிய அளவிலான தூய்மையை காண முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், தைப்பூசத்தின் போது ஆலய வளாகங்கள் தூய்மையாக இருப்பதற்கு தன்னார்வ இயக்கங்களும் முக்கியக் காரணம்.

அந்த வகையில், இவ்வாண்டு சில இடங்களில் குறிப்பாக ஆற்றங்கரையில் குப்பைகள் குறைவாக இருந்ததைக் காண முடிந்ததாக CLEAN THAIPUSAM அமைப்பின் தோற்றுநர் விக்னேஸ்வரன் கலியபெருமாள் தெரிவித்தார்.

அதோடு, தூய்மையைக் கடைப்பிடிப்பதில் மக்களிடம் நல்ல மாற்றத்தைக் காண முடிந்ததாகவும் தன்னார்வலர்களாக வந்து கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வந்து, இந்த இயக்கத்தில் பயணத்தை நம்புக்கையூட்டு விஷயமாக நான் பார்க்கிறேன். சிறுவர்களுக்கு தூய்மையின் தத்துவத்தை நாம் புரிய வைத்துவிட்டால், வரும் காலங்களில் நமக்கு இந்த இயக்கமே தேவைப்படாமல் போய்விடும். அதை நோக்கி நாம் பயணிப்போம்,'' என்றார் அவர்.

மக்கள் திரளாகக் கூடும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் தூய்மையைப் பேண முயற்சி செய்வோம் என்றும் விக்னேஸ்வரன் அறிவுறுத்தினார்.

இதனிடையே, பத்துமலை திருத்தலம் தூய்மையாக காட்சியளிப்பதாகவும் துப்புரவு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்ததைக் காண முடிந்ததாகவும் சிலர் தங்களின் கருத்துகளைக் கூறினர்.

ஆலய வளாகங்களில் தூய்மையைப் பேணுவதில், மற்ற இனத்தவர்களுக்கும் வெளிநாட்டினர்களுக்கும் இந்திய சமுதாயம் ஓர் எடுத்தக்காட்ட இருக்க வேண்டும் என்றக் கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)