புத்ராஜெயா, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- நாட்டிற்குள் E-waste எனப்படும் மின்னணு கழிவுகளைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஏ.கே.பி.எஸ் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை ஒழிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம், அரச மலேசிய போலீஸ் படை பி.டிஆர்.எம் மற்றும் இதர நிறுவனங்களுடன் ஏ.கே.பி.எஸ் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.
''இந்தக் கடத்தல் நடவடிக்கைக்கு எந்தவொரு அமலாக்க அதிகாரியும் பாதுகாப்பு அளித்து கையூட்டு பெறுவது கண்டறியப்பட்டால் அவர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கடுமையாக உத்தரவிட்டுள்ளார்'', என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹாய்லி முஹமட் சைன்.
நாட்டின் அனைத்து அமலாக்க நிறுவனங்களின் நேர்மை குறித்து டத்தோ ஸ்ரீ அன்வார் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளதோடு இவ்விவகாரத்தில் அவர் பொறுமை இழந்துவிட்டதாகவும் முஹமட் ஷுஹாய்லி கூறினார்.
நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தாமும் ஏ.கே.பி.எஸ் தலைமைத்துவமும் சமரசம் காணாது என்று அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)