கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்றைய ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைப் பயன்படுத்தி நாடெங்கிலும் உள்ள முருகன் ஆலயங்களில் மக்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில், சில முதன்மை ஆலயங்களில் கொண்டாடப்பட்ட தைப்பூசத் தினக் கொண்டாட்டத்தைப் பெர்னாமா செய்திகள் கண்டறிந்தது.
சிலாங்கூர், கோலா சிலாங்கூரில் உள்ள ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டும், காலை வேளையில் சுமார் ஐந்தாயிரம் பேர் ஆலயத்திற்கு நேர்த்திக் கடன்களைச் செலுத்த திரண்ட வேளையில், காவடிகளை விட பால் குடங்களே அங்கு அதிகமாக காணப்பட்டன.
மலாக்காவில், பத்து பெரண்டாம் ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான கோயிலில் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு அவ்வாட்டார இளைஞர்கள் தொண்டூழியர்களாக உதவியுள்ளனர்.
தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பக்தர்களுக்குக் குடிக்க பானங்களைக் கொடுத்து கோயிலுக்கு உதவும் வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாக ஆலய தரப்பு கூறியது.
ஜோகூரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்களால் நிரம்பத் தொடங்கியது.
அருளும் நலனும் வேண்டியும், தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
இவ்வாண்டு தைப்பூசத்திற்குச் சுமார் 50 ஆயிரம் பேர் வருகைத் தருவார்கள் என்றும் ஆலயத் தரப்பு எதிர்பார்க்கிறது.
நிறைவாக, கெடா அலோர்ஸ்டாரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பின்னிரவு தொடங்கியே பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இதனிடையே, கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள கோலா கெட்டில் ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் வருகை சற்று அதிகமாகவே காணப்பட்டது.
தைப்பூசக் கொண்டாட்டத்தைக் காண பினாங்கில் இருந்து, இன்று காலை தனது நான்கு நண்பர்களுடன் வந்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த 77 வயதான யூடே கூறினார்.
''நாங்கள் இரண்டு மாதங்களாக மலேசியாவில் இருக்கின்றோம். நாட்டைப் பார்க்க இதனை பார்க்க. எனக்கு பிடித்திருக்கின்றது. அருமையாக இருக்கின்றது. அதனால்தான் நாங்கள் இங்கு இருக்கின்றோம்'', என்றார் அவர்.
மேலும், தைப்பூசக் கொண்டாட்டத்தைப் புகைப்படங்களாக பதிவுச் செய்ய வந்திருப்பதாக, தாய்லாந்தில் பணிபுரியும் கெடாவைச் சேர்ந்த 42 வயதான வின்சென்ட் சியா கூறினார்.
''இங்குள்ள கலாச்சாரம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வந்தேன். வண்ணமயமாக இருக்கின்றது. அவர்களின் கலாச்சாரம் எனக்கும் கொஞ்சம் புரிகின்றது. ஓய்வு கிடைத்தால் நான் இங்கு வருவேன். ஏனென்றால், மலேசியாவில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்'', என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)