பத்துமலை, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- குன்றுகள் தோறும் நின்று அருள் பாலிக்கும் தமிழ்க்கடவுளாம் முருகப் பெருமானை, பக்தர்கள் மனமுருகி வேண்டி நிற்கும் தைப்பூசத் திருநாள்.
வரம் தரும் கந்தக் குமரனைப் போற்றி, நாட்டின் பல திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிலாங்கூர், பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருத்தலத்தில் காலை நேர நிலவரங்களுடன், இன்றைய பெர்னாமா செய்திகள் தொடக்கம் காண்கிறது.
தை மாதம் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் பால்குடங்களையும், காவடிகளையும் ஏந்தியவாறு தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கி விட்டனர்.
அந்த வகையில், நேற்றும், இன்று காலையும் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கும் நிலையில், லட்சக்கணக்கான பால்குடங்கள் ஆலயத்திற்கு வந்தடைந்ததாக, ஆலயத்தின் மேல் குகை தலைமை அர்ச்சகர் கருப்பையா பண்டாரம் கூறினார்.
''இன்று காலை முருகப் பெருமானுக்கு தீர்த்தவாரிய உற்சவம் நடைபெற்று, தற்போது முருகப் பெருமானுக்கு தங்க வேல் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு ஆறுகால பூஜைகள் நடைபெறும். இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்று 24 மணிநேரத்திற்கு ஆலயம் திறந்திருக்கும்'', என்று அவர் கூறினார்.
அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குழுமியதால் குகை கோவிலுக்குச் செல்லும் பாதை கடும் நெரிசலுக்குள்ளானது.
முதல் படிவரிசையில் பால்குடங்கள், இரண்டாவது படிவரிசையில் காவடிகள், அவசர தேவைகளுக்கு மூன்றாம் படி வரிசை மற்றும் மேலிருந்து கீழே இறங்குவதற்கு நான்காம் படி வரிசை என பிரித்து ஆலய நிர்வாகம் முறையான வழிக்காட்டிகளை வைத்திருந்தாலும், அதனை பின்பற்றப்படாத சூழ்நிலை உருவானது.
இதனால், பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில், கால தாமதமும் ஏற்பட தொடங்கியது.
இருப்பினும், பொறுமை காத்து முருகனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியைச் சிலர் பகிர்ந்து கொண்டனர்.
''காத்திருந்து நான் வந்ததற்கு நான் எதிர்பார்க்காத காட்சி எனக்கு பார்க்க கிடைத்தது. முருகனுக்கு வேல் வைக்கும் வைபவம் எனக்கு பார்க்க கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. கண்களெல்லாம் கலங்கிவிட்டது'', என்றார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த கனகமணி இராமசாமி.
''நான் பல ஆண்டுகளாக பால்குடம் எடுக்கின்றேன். நீண்டநேர காத்திருப்பிற்குப் பிறகு என்னுடைய நேர்த்திக் கடனை முடித்து விட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால், அருகில் முருகனைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது'', என்று சிரம்பானைச் சேர்ந்த சர்வேஸ்வரன் சந்திராசன் கூறினார்.
மேலும், கந்தனின் மீது கொண்ட அளவற்ற அன்பை, அவரின் திருவருளில் திளைத்து நின்ற பக்தர் ஒருவர் இவ்வாறு விவரித்தார்.
''அவர் பாதத்தை சரணடைந்து விட்டால் நினைத்தது அனைத்தும் சிக்கிரமாக நிறைவேறிவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை. நூறு விழுக்காடு கண்டிப்பாக நிறைவேறும்'', என்றார் ஸ்தாபாக்கைச் சேர்ந்த மல்லிகா சின்னையா கருப்பையா.
இதனிடையே, பத்துமலை தைப்பூசம் இந்துக்களை மட்டுமின்றி, பிற இனத்தவர்களையும் குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளையும் அதிகம் கவர்ந்திருப்பதால், அவர்களின் வருகையும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
''பத்துமலையில் இது முதல்முறை. முதல்முறையாக தைப்பூசக் கொண்டாட்டத்தை அனுபவிக்கின்றேன். இன்று இங்கு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அனுபவம் மற்றும் மக்களின் ஆன்மிக நம்பிக்கையைப் பார்க்க முடிகின்றது'', என்றார் பிரான்ஸைச் சேர்ந்த சிரின் ஜூனி.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கீழ் தலத்தில் தேவையான அறிவிப்புகளை ஆலயத் தரப்பு வழங்கி வந்த நிலையில், சமுதாய கடப்பாட்டை வலியுறுத்தும் வகையில், இலவச சிகிச்சை முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)