பாங்கி, ஜனவரி 29 (பெர்னாமா) -- நிபா கிருமிதொற்று பரவுவதைத் தொடர்ந்து அனைத்துலக நுழைவாயில்களில் குறிப்பாக இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து வருகை புரியும் பயணிகளுக்கு இலக்கிடப்பட்ட சுகாதார பரிசோதனையைச் சுகாதார அமைச்சு கே.கே.எம் மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட இரு நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் மீது கவனம் செலுத்தி அமைச்சு தற்போது அதிக எச்சரிக்கை நிலையில் உள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.
அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வருகை புரியும் பயணிகள் சிறப்பு வழிகள் வழியாகச் செல்வார்கள் என்றும் உடல் உஷ்ணப் பரிசோதனையின் மூலம் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடர் சிகிச்சைக்காக அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.
“மேலும் நாங்கள் இலக்கிடப்பட்ட பரிசோதனையைத் தொடங்கியுள்ளோம் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இதுவரை எதுவும் இல்லை. எனவே, ஆங்கிலத்தில் கூறப்படுவதுபோல ஒருபோதும் எச்சரிக்கையுடன் இருப்பதைக் கைவிடமாட்டோம் . அலட்சியமாக இருக்காதீர்கள். நிபாவிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம் என்பதற்காக அலட்சியமாக இருக்காதீர்கள். நிபா கிருமிதொற்று (பரிசோதனை) ஈப்போவிலும் உள்ளது. அவர்களுக்கு ஒரு சிறப்பு வழி உள்ளது. காய்ச்சல் மற்றும் வேறு அறிகுறிகள் இருந்தால் நாங்கள் அவர்களை அழைப்போம்”, என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட்.
இன்று சிலாங்கூர் பாங்கியில் RHB-IJN நடமாடும் இருதய ஆரோக்கிய பரிசோதனை பிரிவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
இதனிடையே நிபா கிருமிதொற்று குறித்த பரிசோதனையை MySejahtera செயலியில் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தற்போதைய தேவைக்கு ஏற்ப CPRC எனப்படும் தேசிய அவசரக் காலத் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மையம் தீர்மானிக்கும் என்று டாக்டர் சுல்கிஃப்லி விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)