சுங்கை சிப்புட் , ஜனவரி 28 (பெர்னாமா) -- பேராக், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சங்காட் சாலாக், கெமிரி தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்களான 34 குடும்பங்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்டிக் கொள்வதற்கான நிலப்பட்டாவை இன்று வழங்கியது.
அவ்விரு தோட்டங்களில் இருந்து வெளியேறிய முன்னாள் தொழிலாளர்கள் தங்களுக்கு குடியிருக்க நிலம் கேட்டு கடந்த 26 ஆண்டுகாலமாக நடத்திய போரட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது.
பேராக் மாநிலத்தை உட்படுத்திய பல தோட்டங்கள், ரப்பரில் இருந்து செம்பனைக்கு பயிரீட்டிற்கு மாற்றப்பட்டபோது, வேலையிழந்த பலரில், சங்காட் சாலாக் மற்றும் கமிரி தோட்ட மக்களும் அடங்குவர் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.
இதுவரை பேராக் மாநிலத்தில் அரசாங்க நிலங்களில் வசித்து வந்த 90 விழுக்காட்டு இந்தியர்களின் நிலப் பிரசனைகளுக்கு தீர்வுக்காண்டுப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலப்பட்டவைப் பெற்றுக் கொண்ட சிலர் தங்களின் மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.
''இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதை நாங்கள் கருதுகிறோம். அடுத்த கிடைத்த இந்த நிலத்தில் சொந்த வீடு கட்டி எங்களின் ஆயுள் முடிவதற்குள் அந்த வீட்டில் குடிபுக வேண்டும் என்பதே எங்களில் கனவு,'' என்று அத்தோட்டங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் மகேஸ்வரி முனுசாமி, பழனியம்மா வெள்ளைச்சாமி இருவரும் தெரிவித்தனர்.
சுங்கை சிப்புட் மாவட்ட அலுவலகத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில், இவர்களுக்கான நிலப்பட்டா வழங்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)