புத்ராஜெயா, ஜனவரி 28 (பெர்னாமா) -- தைப்பூசப் பெருவிழாவினை முன்னிட்டு, மனிதவள அமைச்சு KESUMA, "மலேசிய மடானி பக்தி: தைப்பூசம் 2026" எனும் திட்டத்தை முன்னெத்துள்ளது.
மனிதநேயம், சமூக மேம்பாடு மற்றும் வருங்கால வேலைவாய்ப்புச் சந்தை ஆகியவற்றை முன்னிறுத்தும் 'மலேசியா மாடானி' கோட்பாட்டிற்கு இணங்க; சேவை, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய விழுமியங்களை மக்களிடையே வேரூன்றச் செய்யும் ஒரு பாலமாக இத்திட்டம் அமைந்துள்ளது.
பொதுமக்களுக்கான சேவைகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் வாயிலாக சமூகத்தை அணுகும் நோக்கில், அமைச்சின் இந்தத் தைப்பூசப் பெருந்தொண்டானது மூன்றாவது ஆண்டாகத் தொடர்கிறது.
இத்திட்டமானது ஜனவரி 29 முதல் பிப்ரவரி முதலாம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும்.
அக்காலகட்டத்தில் பத்துமலையில் அமைக்கப்படவிருக்கும் அமைச்சின் சேவை மையங்கள் நாள்தோறும் காலை மணி 8 முதல் மாலை மணி 5.00 வரை செயல்படும்.
அர்த்தமுள்ள இத்திருவிழாக் கொண்டாட்டங்களின் ஊடே வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதையைப் பேணி இந்தியச் சமூகத்தினர் தங்களுக்குத் தேவையான சேவைகள், தகவல்கள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைத் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதே இம்முயற்சியின் உன்னத நோக்கமாகும்.
இத்திட்டத்தின் முத்தாய்ப்பாக வரும் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுடன் இணைந்து, தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிடுவார்.
இவ்விழா நடைபெறும் நாட்களில், வருகை தரும் பொதுமக்கள் அமைச்சின் சிறப்பு முகப்பிற்கு வந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை நேரடியாகப் பெற்றுப் பயனடையலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)