புத்ராஜெயா, ஜனவரி 24 (பெர்னாமா) -- ஏறக்குறை 30 கோடி ரிங்கிட் மதிப்புடைய முதலீட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், டான் ஶ்ரீ அங்கீகாரம் கொண்ட ஒரு நபருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
அவ்வழக்கு விசாரணைக்கு உதவும் நோக்கில், மேலும் இருவரை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்ததோடு, கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஐந்து வளாகங்களை சோதனையிட்டதாக நம்பப்படுகிறது.
2021 முதல் 2024-ஆம் ஆண்டுக்குள், இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் நோக்கத்திற்காக, ஏறக்குறைய 1,700 முதலீட்டாளர்களிடமிருந்து 30 கோடி ரிங்கிட் வரையில் வசூலித்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரம் கூறியது.
அவ்வாறு வசூலிக்கப்பட்ட அந்நிதி, முதலீட்டாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த நோக்கங்களைத் தவிர்த்து இதர விஷயங்களுக்காக தவறாக செலவிடப்பட்டதாக, நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அந்த டான் ஶ்ரீ தனது பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பலரின் கவனத்தை ஈர்த்து, இத்திட்டத்தில் முதலீடு செய்ய நம்பிக்கை ஊட்டியதாக கூறப்பட்டுள்ளது.
மீட்பு நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதி தொடர்பான, கண்காணிப்பு நடவடிக்கையில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
விசாரணை செயல்முறைக்கு உதவும் அதேவேளையில், சம்பந்தப்பட்ட நிதியின் நகர்வை தடுக்கும் விதமாக, இதுவரையில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 14 தனிநபர் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)