Ad Banner
 பொது

இலவசக் கல்வி திட்டம்; அனைத்து தரப்புடனும் பி.டி.பி.டி.என் நெருக்கமாக செயல்படும்

23/01/2026 04:15 PM

கோலாலம்பூர், ஜனவரி 23 (பெர்னாமா) -- RPTM எனப்படும் 2026 முதல் 2035-ஆம் ஆண்டு வரையிலான மலேசிய உயர்கல்வி திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பத்தாயிரம் மாணவர்களுக்கான உதவித்தொகை அல்லது இலவசக் கல்வி திட்டம் திறம்பட மற்றும் விரிவான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிச் செய்ய, அனைத்து தரப்புடனும் தேசிய உயர்க்கல்வி கடனுதவி திட்டம், பி.டி.பி.டி.என் நெருக்கமாக செயல்படும்.

பி.டி.பி.டி.என் மூலம் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருவதால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பைத் தொடர இத்திட்டம் வாய்ப்பளிப்பதாக, அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம் கூறினார்.

சமூக இயக்கம் மற்றும் நாட்டின் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கு முதன்மையாக விளங்கும் கல்வியை உருவாக்குவதன் மூலம் வறுமைச் சங்கிலியை உடைக்க இந்நடவடிக்கை துணைப் புரியும் என்றும் நோர்லிசா அப்துல் ரஹிம் கூறினார்.

மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அந்த அறிவிப்பு, சமூகத்தில், குறிப்பாக, ஏழ்மை நிலையிள் உள்ள மாணவர்கள் சமமான மற்றும் தரமான உயர்கல்வி பெறுவதை உறுதிச் செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 மாணவர்களுடன் ஒப்பிடுகையில், பி.டி.பி.டி.என் இலவச கல்வி திட்டத்தை வழங்க, e-Kasih தரவு தளத்தின் அடிப்படையில் வரிய நிலையிலான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதை, கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் அறிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)