புத்ராஜெயா, ஜனவரி 21 (பெர்னாமா) -- சட்டவிரோதமாக e-waste எனப்படும் மின்னணு கழிவுகள் இறக்குமதி செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் மேலும் தீவிரப்படுத்தவுள்ளது.
நாட்டின் முதன்மை துறைமுகங்கள் வழியாக சுமார் 2,000 முதல் 3,000 மின்னணு கழிவு கொள்கலன்களில் கடத்தி வரப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, தற்போது கவலைக்குரிய மற்றும் விரிவான அமலாக்க நடவடிக்கை தேவைப்படும் மின்னணு கழிவு கடத்தலின் உண்மையான அளவைக் காட்டுவதாக எஸ்.பி.ஆர்.எம் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹமட் குஷாரி யஹயா, புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
சமந்தப்பட்ட நிறுவனங்கள் வெளிநாட்டினருக்குச் சொந்தமானவை என்றும், அவை மறுசுழற்சி நோக்கத்திற்காக மின்னணு கழிவுகள், நெகிழி மற்றும் காகிதங்களை இறக்குமதி செய்வதாகவும் நம்பப்படுகிறது.
இத்தகையக் கழிவுகள் நாட்டினுள் நுழைவதைத் தடுக்க வேண்டிய சில அதிகாரிகளிடமிருந்து இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கலாம் என்பதை எஸ்.பி.ஆர்.எம் மறுக்கவில்லை என்று அஹமட் குஷாரி தெரிவித்தார்.
இப்பிரச்சினையை களைவதற்கு, 12 நிறுவனங்களை உள்ளடக்கிய மின்னணு கழிவுகள் அமலாக்க சிறப்பு பணிக்குழு கூட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)