கோலாலம்பூர், ஜனவரி 20 (பெர்னாமா) -- கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும் வகையில் இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக வைட்மைண்ட் ஏஐ சொலுஷன் நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான சிவமணி தெரிவித்தார்.
நடப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அந்த இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் செயற்கை நுண்ணறிவின் வழி நிஜ உலக வணிக சிக்கல்களை விவேகமாகத் தீர்க்கும் திறனை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்காக நடத்தப்பட்ட இனாக்சஸ் குறித்த விளக்கக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
பினாங்கு மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், அறிவார்ந்த ஆட்டோமேஷன், தரவு அறிவியல், இயந்திர கற்றல் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல தயாராக உள்ள நிறுவனங்களுக்கு தனது சேவையை வழங்கவுள்ளது.
மேலும், சிக்கலான கட்டுமான சூழல்களை எளிமையாக்கும் நோக்கிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிவமணி சுட்டிக்காட்டினார்.
அவற்றுடன் ஒருங்கிணைந்த பணி ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவுகளை கொண்டு திட்டமிடுதல் என அனைத்து பணிகளையும் இது எளிமையாக்குவதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)