இந்தோனேசியா, ஜனவரி 19 (பெர்னாமா) -- இந்தோனேசியா சுலாவேசி தீவு அருகே கடந்த சனிக்கிழமை காணாமல் போன TURBOPROP ATR 42-500 ரக தனியார் விமானம் மக்காசர்-இல் தரையிறங்கும் தருணத்தில் தாழ்வாகப் பறக்கும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தோனேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படும் அவ்விமானம் யோக்யகார்த்தா ADI சுசிப்டோ விமான நிலையத்திலிருந்து சுல்தான் ஹசனுடின் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கிப் பயணித்ததாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
பயணிகள் மூவர் விமானப் பணியாளர்கள் எழுவர் உட்பட கேப்டன் ஆண்டி டஹானன்டோ விமானியுடன் அவ்விமானம் புறப்பட்டது.
தரையிறங்கும் கட்டத்தில் விமானத்தின் தாழ்வான நிலை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் அவற்றின் அசல் பாதையிலிருந்து விலகிச் செல்லும் பட்சத்தில் தடைகளை மோதும் அபாயம் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
விமானத்தை பாதுகாப்பாக தரையிறங்கும் தடத்திற்கு மீண்டும் வழிகாட்ட ATC அதிகாரிகள் சரியான வழிமுறைகளை அளித்த போதிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவ்விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)