Ad Banner
 பொது

காணாமல் போனதாகக் கூறப்பட்ட நடிகை இதய நோயால் உயிரிழந்தார்

18/01/2026 02:34 PM

கோலாலம்பூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- சவூதி அரேபியாவின் ஜெட்டா, ராஜா அப்துல் அசிஸ் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த வியாழக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த நடிகை நடியா கெசுமா, இதய நோயால் உயிரிழந்தார்.

இத்தகவலை அந்த நடிகையின் கணவர் பேராசிரியர் டாக்டர் முஹமட் கமருல் கபிலன் அப்துல்லா இன்று காலை தமது முகநூல் பதிவின் வழி உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட நடிகையை காணவில்லை என்று கூறப்பட்ட நாளான கடந்த வியாழக்கிழமை காலை மணி 8.07-க்கு அவர் உயிரிழந்ததாக 57 வயதுடைய பேராசிரியர் டாக்டர் முஹமட் கமருல் தெரிவித்தார்.

அதேவேளையில், நேற்றிரவு மணி 11-க்கு சுற்றுலா நிறுவனம் தமது தாயார் உயிரிழந்த செய்தியை தெரிவித்ததாக அந்த நடிகையின் மகள் மற்றொரு பதிவில் குறிப்பிட்டார்.

சுற்றுலா நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த உம்ரா புனித யாத்திரையில் நடியா கெசுமா இதர 21 பேருடன் கலந்து கொண்டார்.

அவர், கடந்த செவ்வாய்க்கிழமை, அதிகாலை மணி 1.48-க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

இந்நிலையில், அவரின் மரணச் செய்தியை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)