Ad Banner
 பொது

கைது செய்யப்பட்ட முன்னாள் நிருபர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்படுவார்

17/01/2026 04:11 PM

கூலிம், 17 ஜனவரி (பெர்னாமா) -- இனவாதத்தைத் தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட முன்னாள் செய்தித் தள நிருபர், போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ததும் விடுவிக்கப்படுவார்.

தேசிய போலீஸ் படைத் தலைவரிடம் தகவல் பெற்ற உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அவ்விவகாரத்தை உறுதி செய்தார்.

சம்பந்தப்பட்ட அந்த சொற்பொழிவின்போது, பாலஸ்தீனத்தின் அண்மைய நிலவரத்திற்கும் மலேசியாவில் சீன சமூகத்திற்கு வழங்கப்படும் அணுகுமுறையையும் தவறாக ஒப்பிட்டதாக, அந்த முன்னாள் நிருபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சட்ட நடைமுறைக்கு ஏற்ப போலீஸ் நடவடிக்கை எடுத்ததாகவும், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

''ஆகவே, அதுபோன்ற புகார் வரும்போது, ​​போலீசார் தொடர் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கும் என்று நான் நம்புகிறேன். அதுதான் முதல் செயல்முறை. மேலும் சம்பந்தப்பட்ட நிருபர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார், விசாரணைக்கும் உதவுவார் என்று நான் நம்புகிறேன். மேலும், விசாரணை செயல்முறையின் முடிவில், அறிக்கை, ஏஜிசி-யிடம் ஒப்படைக்கப்படும். நடவடிக்கை எடுப்பது ஏஜிசி-யின் பொறுப்பாகும். அதுதான் போலீஸ் படையின் அத்தியாவசிய கடமை...,'' என டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இன்று, கெடா, கூலிம் ஹை-டெக் பார்க்-கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)