கோலாலம்பூர், 17 ஜனவரி (பெர்னாமா) -- பாலஸ்தீனம் குறித்த சொற்பொழிவு ஒன்றில், மலேசியாவில் இனவாதப் பிரச்சனையைத் தூண்டும் ஊடகவியலாளர் ஒருவரின் காணொளி பதிவு பரவலாகப் பகிரப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, (Free Malaysia Today) செய்தித் தள நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 வயதான அச்சந்தேக நபரை, நள்ளிரவு மணி 12 அளவில், D5 பிரிவின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலீசார் கைது செய்தனர்.
ஜனவரி 12-ஆம் தேதி சொற்பொழிவு ஒன்றின்போது, இங்கிலாந்து அரசியல்வாதி ஜோர்ச் கலோவே-யிடம் சம்பந்தப்பட்ட அந்நிருபர் கேள்வி கேட்கும் காணொளி பரவியதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விவகாரம் தொடர்பில், போலீசார் மூன்று புகார்களைப் பெற்றுள்ளனர்.
1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்ஷன் 4(1), குற்றவியல் சட்டம் செக்ஷன் 505(c), 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)