போர்ட் டிக்சன், 17 ஜனவரி (பெர்னாமா) -- அண்மையில், சமூக ஊடகங்களில் பரலாக பகிரப்பட்ட (YEYE) எனும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய, அநாகரீக செயல்களில் ஈடுபட்ட 15 அதிகாரிகளை தமது தரப்பு கண்டறிந்துள்ளதை தரைப்படைத் தளபதி Jஜெனரல் டத்தோ அஸ்ஹான் முஹமாட் ஒத்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தற்போது சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு எதிராக நியாயமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இராணுவ சேவையில் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதை தமது தரப்பு தீவிரமாகக் கருதுவதாகவும் இச்சம்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ அஸ்ஹான் குறிப்பிட்டார்.
''குற்றம் நிரூபிக்கப்பட்டால், சேவையில் தற்போதுள்ள விதிகள் மற்றும் சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், இராணுவ வீரர்களிடையே ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளை நான் தீவிரமாகக் கருதுகிறேன். அவை ஏற்கனவே உள்ள கட்டளைகளுக்கு முரணானவை. இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் தொடர்பாகப் பெறப்பட்ட அனைத்து புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,'' என ஜெனரல் டத்தோ அஸ்ஹான் முஹமாட் ஒத்மான் கூறினார்.
சனிக்கிழமை, நெகிரி செம்பிலான் போர்ட் டிக்சன்-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், டத்தோ அஸ்ஹான் செய்தியாளர்களிடம் பேசினார்.
இராணுவத்தின் புதிய தலைமைத்துவம் குற்றம் புரியும் உயர் அதிகாரிகள் உட்பட எந்தவொரு தரப்பினருடனும் சமரசம் செய்யாது என்று கூறிய அவர், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)