இந்தியா, ஜனவரி 16 (பெர்னாமா) -- இந்தியா, புது டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியாவின் A350 ரக விமானம் ஒன்று இயந்திரக் கோளாறை எதிர்நோக்கியது.
ஈரானிய வான்வெளி மூடப்பட்டதால் நியூ யார்க்கிற்கான பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து புது டெல்லிக்குத் திரும்பிய அவ்விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானிய வான்வெளி திடீரென மூடப்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட பயணம் பாதிக்கப்பட்டதால் ஒன்று.சுழியம்.ஒன்று (101) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புது டெல்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், டெல்லியை அடைந்த அவ்விமானம் அடர்ந்த மூடுபனியில் பயணித்தபோது பயணப் பெட்டி கொள்கலனின் மீது மோதியதால் வலது இயந்திரம் சேதமடைந்தது.
எனினும், இச்சம்பவத்தில் பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டதற்கான எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)