Ad Banner
 பொது

தம்பதியர் கொலை; உண்மை நோக்கம் விசாரணையில் உள்ளது

16/01/2026 02:16 PM

கூச்சிங், ஜனவரி 16 (பெர்னாமா) -- சரவாக், கூச்சிங், ஶ்ரீ அமானில் உள்ள வீடொன்றில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி கணவன் மனைவி தம்பதியர் இறந்து கிடக்கக் காணப்பட்ட சம்பவத்தின் உண்மையான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, குடும்ப உறுப்பினர்கள், அண்டை அயலார், பணியிட நண்பர்கள் என இதுவரை 21 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ முஹமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

நேற்று, சரவாக் பொது மருத்துவமனையின் தடயவியல் துறையில், அவ்விருவரின் உடல்கள் மீது, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் சைனால் கூறினார்.

அவ்வாடவருக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட 11 காயங்கள் இருந்தது அப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதேவேளையில், அவரின் மனைவிக்கு கழுத்துப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயமும் காணப்பட்டது.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஶ்ரீ அமான், ஜாலான் பராயூனில் ஆசிரியர் ஒருவரும் அவரின் மனைவியும் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டதை முஹமட் சைனால் முன்னதாக உறுதிபடுத்தியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)