கோலாலம்பூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- விளைச்சலுக்கு துணைநின்ற சூரியன், விதை உயிர்பெறச் செய்த மண், வாழ்விற்கு ஆதாரமான நீர், மற்றும் உழைப்பில் துணைநிற்கும் விலங்குகள், இந்த இயற்கை சக்திகளுக்கு நன்றி கூறும் நன்நாளே பொங்கல் திருநாளாகும்.
தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் தைப்பொங்கல் உழைப்பின் மகிமை குடும்ப உறவுகளின் பேராற்றல் ஆகியவற்றை போற்றும் ஒரு பண்டிகையாக திகழ்கின்றது.
தை மகளை வரவேற்கும் வகையில் கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் இன்று காலையில் மக்கள் திரலாக வந்து பொங்கல் வைத்து வணங்கி இறைவனின் ஆசியைப் பெற்றனர்.
தைப்பொங்கல் திருநாள் என்பது ஒரே நாளில் கொண்டாடப்படும் விழா அல்ல இது போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
பழையன கழித்து புதிய தொடக்கத்தை வரவேற்று சூரியன், இயற்கை மற்றும் விலங்குகளுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் வகையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகக் கூடி பொங்கலிட்டு உறவினர்களுடன் விருந்துண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இத்திருநாள் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்து உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு அரிய நாளாக திகழ்வதாக ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
''நாடெங்கும் இருக்க கூடிய இந்தியர்கள், இனம் மதம் பாராமல் இந்த தை முதல் நாளை பொங்கலாக கொண்டாடுகின்றனர். இது தமிழர் திருநாளும் கூட'' என்றார் டான் ஶ்ரீ ஆர். நடராஜா
புதிய அரிசி, பால், வெல்லம், பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய் கொண்டு பொங்கல் பானையில் பொங்கி வழியும் போது “பொங்கலோ பொங்கல்!” என்ற ஆரவாரம் வளமையும் மகிழ்ச்சியையும் வழங்கும் தருணத்தில் தங்களின் மனங்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதாக ஆலயத்திற்கு வந்திருந்த சிலர் தெரிவித்தனர்.
''பொங்கல் வைத்த பிறகுதான் ஆலையத்திற்கு வந்தோம். இதன் பிறகு வீட்டிற்கு சென்று சைவமாக சமைத்து, படையால் பொட்டு, அதன் பிறகு குடும்பத்தினருடன் கொண்டாடுவோம். என்றார் ''உமா நவோமி பௌதாஸ்
''பாரம்பரிய கலாச்சரத்தின் படி, வீட்டின் வெளியெ பொங்கல் வைத்து, அதன் பிறகு ஆலையத்திற்கு வந்து இங்கு பூஜைகலை நிறைவேற்றுவோம்.'' என்றார் யுவன்ராஜ் செல்வம்
உழைப்பின் பலனை கொண்டாடும் வகையில் ஆலயங்கள் மட்டுமின்றி இல்லங்களிலும் பொங்கல் வைத்து இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் உன்னத நாள் இதுவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)