புத்ராஜெயா, ஜனவரி 15 (பெர்னாமா) -- ஆரம்பப் பள்ளிகளுக்கான யூ.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று மாணவர்களுக்கான பி.டி.3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவதன் தேவை குறித்த ஆய்வு இவ்வாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கல்வி ஆலோசனை மன்றம் எம்-பி-பி-கே-வின் உறுப்பினர்களை நியமிக்கும் செயல்முறை நிறைவடைந்ததும் இவ்விவகாரம் குறித்த ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
"நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களின் நியமனத்திற்காக காத்திருக்கின்றோம். இவ்வாண்டுக்குள் நாங்கள் அதனை நிறைவுச் செய்வோம். ஏனென்றால், தொடர்புடைய பல கருத்துகளை நாங்கள் பார்க்கின்றோம். அந்த கருத்துகளை நாங்கள் சேகரித்து, அதன் ஆய்வுகள் கல்வி அமைச்சின் நிலையில் உள்ளது. நாங்கள் ஆலோசனை மன்றத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்வோம். கூடிய விரைவில்.'' என்றார் ஃபட்லினா சிடேக்
இன்று, Presint 9 (1)-இல் உள்ள ஒரு தேசிய பள்ளியில் பாலர் பள்ளிக்கான PAKAT திட்டம் மற்றும் BAP எனப்படும் பள்ளி தவணைக்கான தொடக்கக் கட்ட உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.
2021-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் ரத்துச் செய்யப்பட்ட வேளையில் 2022-ஆம் ஆண்டு பி.டி.3 தேர்வு ரத்துச் செய்யப்பட்டது.
பின்னர் அவ்விரு தேர்வுகளும் பள்ளி அடிப்படையிலான திறன் மதிப்பீட்டுத் தேர்வுகளாக மாற்றம் கண்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)