கோலாலம்பூர், ஜனவரி 14 (பெர்னாமா) -- மலேசிய இராணுவப் படை ஏ.டிஎம்.-மின் மேலும் ஓர் உயர் அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.ம் இன்று கைது செய்தது.
ஏ.டிஎம்.-மில் கொள்முதல் குத்தகை தொடர்பான விசாரணைகளுக்கு உதவும் பொருட்டு இன்று காலை 11 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தரைப்படை முன்னாள் தளபதி மற்றும் அவரது மனைவிகள் இருவர் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.ம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
அவர்கள் மாலை மணி 6.30-க்கு விடுவிக்கப்பட்டதாகவும் இவ்வழக்கு தொடர்பான மேலும் தகவல்கள் நாளை எஸ்.பி.ஆர்.ம்-மின் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரைப்படையின் கொள்முதல் குத்தகை தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி தரைப் படை முன்னாள் தளபதி ஏழு நாள்களுக்கும் அவரது இரு மனைவிகள் முறையே ஆறு மற்றும் மூன்று நாள்களுக்கும் தடுத்து வைக்கப்பட்டனர்.
திறந்த குத்தகை முறையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மலேசிய தரைபடையின் கீழ் உள்ள கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் எஸ்.பி.ஆர்.ம் அதிகாரிகள் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தற்காப்பு அமைச்சு தலைமையகத்தில் விசாரணை நடத்தினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)