Ad Banner
 பொது

ஜே.பி.என் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - சைஃபுடின்

13/01/2026 03:55 PM

அலோர் ஸ்டார், 13 ஜனவரி (பெர்னாமா) -- 17 வயது மாணவன் ஒருவனுக்கு, அடையாள அட்டை வழங்கும் செயல்முறையில் ஏற்பட்ட தாமதம் குறித்து, தேசிய பதிவுத் துறை, ஜே.பி.என்-னை விமர்சித்த வழக்கறிஞர்கள் குழு ஒன்றின் செயல், அத்துறை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட மாணவனுக்கு குடியுரிமை வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் ஜே.பி.என் வேண்டுமென்றே தாமதம் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கமளித்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞரின் பெற்றோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஜே.பி.என்-னுக்கு சென்றபோது இச்சவம்பவம் குறித்து கண்டறியப்பட்டது.

வழக்கு விசாரணையில், பிறப்புச் சான்றிதழ் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டது தெரியவந்தது.

தவறான பிறப்புத் தகவல்களை வெளியிடும் மோசடி குழுவினருடன் தொடர்பில் இருந்ததற்காக, ஜே.பி.என்-இன் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் மருத்துவமனை மூலமாகவே அச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை டத்தோ ஶ்ரீ சைஃபுடின் சுட்டிக்காட்டினார்.

''அவர்களின் உடல் தோற்றத்தை வைத்துப் பார்த்தபோது அந்த மாணவனும் அவரின் பெற்றோருக்கும் இடையே எந்தச் சாயலும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தது. அதாவது, இது ஒரு மோசடி கும்பலின் செயல் என்பது உறுதியானது. அவன் குழந்தையாக இருந்தபோதே பிறப்புச் சான்றிதழ் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டது என்பது பெற்றோருக்குத் தெரிந்திருக்கிறது. குழந்தையாக இருந்தபோது அடையாளம் காண்பது கடினம். ஆனால், 12 வயதாகும் போது அத்தோற்ற வேறுபாடு தெளிவாகத் தெரிந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது அப்பெற்றோர் உண்மையை ஒப்புக்கொண்டனர்'' என டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இந்நிலையில், கூட்டரசு அரசியலமைப்பு, சட்டவிதி 14(1)(i)-யிற்கு ஏற்ப, அந்த மாணவன் குடியுரிமைப் பெறத் தகுதியுடையவர் என்று கடந்தாண்டு, டிசம்பர் 8-ஆம் தேதியிலான, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவதில், JPN-க்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)