பத்து காவான், 11 ஜனவரி (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், இமிகிரேஷன் எஃப்.சி இப்பருவத்தில் தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நேற்றிரவு பினாங்கு, பத்து காவான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இமிகிரேஷன் எஃப்.சி 3-0 என்ற கோல்களில் கிளாந்தான் யூனைடட் அணியை வீழ்த்தியது.
புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள இமிகிரேஷன் எஃப்.சி முதல் பாதி ஆட்டத்தை ஆக்கிரமித்த வேளையில், அதனை கோல் அடிக்க விடாமல் கிளாந்தான் யூனைடட் தற்காத்தது.
ஆயினும், 31-வது நிமிடத்தில் இமிகிரேஷன் எஃப்.சி முதல் கோலை அடித்து முதல் பாதியை முடித்து வைத்தது.
இரண்டாம் பாதியின் 70-வது நிமிடத்தில் இமிகிரேஷன் எஃப்.சி இரண்டாம் கோல் அதன் இறக்குமதி ஆட்டக்காரரான எட்வர்டோ ஜோஸ் சோசா வேகாஸ் வழி போடப்பட்டது.
அதனை அடுத்து, மூன்று நிமிடங்களுக்கு பின்னர், எதிரணியின் கோலை தடுக்க தற்காப்பு பகுதியில் கிளந்தான் ஆட்டக்காரர் முயற்சித்த போது அது தவறி சொந்த கோலானதில், இமிகிரேஷன் எஃப்.சி-க்கு மூன்றாவது கோல் கிடைத்தது.
இந்த வெற்றியின் வழி, இமிகிரேஷன் எஃப்.சி 15 புள்ளிகளைச் சேகரித்திருக்கும் வேளையில் 11 புள்ளிகளோடு கிளாந்தான் யூனைடட் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)